இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள் இனி பங்களிப்பு செலுத்துவதையும், பங்கேற்பதையும் மத்திய அரசு தடை செய்யும். தேசிய அளவிலான சாலைகள் கட்டுமானத்தில் சீன பங்காளர்களைக் கொண்ட கூட்டு நிறுவனங்களுக்கு இனி அனுமதி வழங்க மாட்டோம். கூட்டுத் தொழில் வழியாக வந்தால் சீன நிறுவனங்கள் மறைமுகமாக நமது நாட்டிற்குள் நுழைவதையும் தடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
நெடுஞ்சாலைத் திட்டங்களில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய அதற்கான தகுதி அளவுகோல்களை தளர்த்தவும் அரசு முடிவெடுத்துள்ளது. விரிவுபடுத்துவதற்காக சீன நிறுவனங்களைத் தடைசெய்வதும், இந்திய நிறுவனங்களுக்கு விதிமுறைகளை தளர்த்துவதும் ஒரு கொள்கை விரைவில் வெளிவரும். தற்போது சில சீன பங்காளர்களை உள்ளடக்கிய ஒரு சில திட்டங்கள் மட்டுமே மேற்கொள்ள இசைவு அளிக்கப்பட்டுள்ளன.
எதிர்கால டெண்டர்களில் புதிய முடிவு செயல்படுத்தப்படும். எதிர்கால ஏலங்களைப் பொறுத்தவரை, சீன கூட்டு முயற்சிகள் ஏதேனும் இருந்தால் முற்றிலுமாக மறுதலிப்பு செய்யப்படும். தொழில்நுட்ப மற்றும் நிதி விதிமுறைகளை தளர்த்துவதற்கான கூட்டத்தை நடத்த நெடுஞ்சாலை செயலாளர் கிரிதர் அரமனே மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர் எஸ்.எஸ்.சந்து ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.