டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் தவறான வரைபடத்தைக் காட்டியுள்ள இணைப்பை தளத்திலிருந்து அகற்றுமாறு விக்கிப்பீடியாவிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா தளத்தில் இந்தியா-பூட்டான் நாடுகளுக்கு இடையேயான வெளியுறவு குறித்த தகவல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில், 'ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியை தவறாக சித்தரிக்கும் வரைபடம் இடம்பெற்றுள்ளதாகவும், இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ட்விட்டர் பயனர் சத்ராசல் சிங் என்பவர் ட்விட்டரில் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மீறும் வகையில் அமைந்துள்ள ஜம்மு-காஷ்மீரின் தவறான வரைபடத்தை அகற்றுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நவம்பர் 27ஆம் தேதி விக்கிப்பீடியாவிற்கு உத்தரவிட்டது. தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000இன் பிரிவு 69 ஏ-இன் கீழ், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் வழிமுறைகளைப் விக்கிப்பீடியா பின்பற்றாவிட்டால், தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000இன் பிரிவு 69 ஏ படி, இந்தியாவில் விக்கிப்பீடியா தளத்தின் பயன்பாட்டை முடக்குவது உட்பட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை விக்கிப்பீடியா அந்த வரைபடத்தை நீக்கவோ சரிசெய்யவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கல்வான் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்று - சீனாவின் சதிச் செயலை அம்பலப்படுத்திய அமெரிக்கா