உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு ஒரு கோடியே 14 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தைத் தொட்டுவருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 25 ஆயிரம் பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய ஏழு மாநிலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு 19 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 6 லட்சத்து 90 ஆயிரத்து 349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19 ஆயித்து 683 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவின் பாதிப்பு எண்ணிக்கையைத் தாண்டிய இந்தியா, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உலகளவில் மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது.