இந்திய ராணுவத்தை பலப்படுத்த அவ்வப்போது புதிய ஏவுகணைகள், கருவிகளைத் தயாரித்து வழங்கி வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய முயற்சியாக அதிக திறன்கொண்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்கு, ’ருத்ரம் 1’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த ஏவுகணை காலை 10.30 மணியளவில் பலசோர் கடற்கரையிலிருந்து சுகோய் - 30 என்ற விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த ஏவுகணை விரைவில் இந்திய விமான படையின் சுகோய் ரகப் போர் விமானங்களுடன் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இது எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை அழிப்பதற்காக வானிலிருந்து ஏவப்படும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.