இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஸ்மார்ட்போன்களில் உபயோகிப்படும் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தடை விதித்தது. இதில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட பல முக்கிய செயலிகளும் அடக்கம். அரசின் இந்த முடிவுக்கு பல தரப்பிலிருந்து ஆதரவுகள் பெருகி வரும் நிலையில், இது, இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி எனவும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெளிவற்ற பார்வையால் குறிப்பிட்ட சீன செயலிகள் மட்டும் இந்தியாவின் பாதுகாப்பை பாதிப்பதாகவும், வெளிப்படைத் தன்மை இல்லையென்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து, தேசிய பாதுகாப்பு விதிகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இச்செயல் சர்வதேச வர்த்தகத்திற்கும், மின் வணிகத்திற்கும் எதிரானதாக உள்ளது. தடை செய்யப்பட்டுள்ள செயலிகள் அதிகப்படியான இந்திய பயனர்களைக் கொண்டுள்ளன. இந்திய அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து தான், செயலிகள் செயல்பட்டு வருகின்றன.