இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவினர். பயங்கரவாதிகளை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடிக்க ஆப்ரேஷன் விஜய்யை இந்திய ராணுவம் செயல்படுத்தியது. இதன்விளைவாக உயரமான மலைத்தொடர்களில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடித்ததோடு, 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்போரில் இந்தியா வெற்றியைப் பெற்றது. இந்தப்போரில் மரமணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்தவகையில், இன்று (ஜூலை 26) கடைபிடிக்கப்பட்ட வெற்றி தினத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், எதிரிகளை எதிர்த்துப் போராடிய இந்தியப் படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் மட்டுமல்லாது அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.