இந்தியாவில், 2014-2016ஆம் ஆண்டுகளில் பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதம் (maternal mortality rate) 130ஆகவும், 2015-2017ஆம் ஆண்டுகளின் இறப்பு விகிதம் 122ஆகவும் இருந்தது என மாதிரி பதிவு அமைப்பு (sample registration system) கூறுகிறது.
இந்த இறப்பு விகிதமானது, 15-49 வயதுடைய ஒரு லட்சம் பெண்களுக்கு நடைபெற்ற பிரசவத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2016- 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரசவத்தை கணக்கிட்டதில் தாயார்கள் உயிரிழப்பது 113ஆக உள்ளது என மாதிரி பதிவு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7.4 விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அமைப்பின் அறிக்கையின்படி, " 2016- 2018 ஆண்டின்படி ஆந்திராவில் இறப்பு விகிதம் 74 ஆகவும், தெலங்கானாவில் 63ஆகவும், தமிழ்நாட்டில் 60ஆகவும், மகாராஷ்டிரா 46ஆகவும், கேரளா 43ஆகவும் உள்ளது.
கணக்கெடுப்பின்படி, தெலங்கானாவில் இறப்பு விகிதம் முந்தைய ஆய்வுடன் ஒப்பிடுகையில் 17.1 விழுக்காடு குறைந்துள்ளது. அதே போல், ராஜஸ்தானிலும் 22 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால், கேரளா, மேற்கு வங்கம், உத்தரகண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்கள் முந்தைய மதிப்பீடுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்மார்கள் இறப்பு விகிதமானது பிரசவத்தின் போது உயிரிழப்பதை வைத்தும், கர்ப்பம் தொடர்பான சிக்கலினால் உயிரிழப்பதை வைத்தும் கணக்கிடப்படுகிறது.