பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) என்ற அமைப்பு லாப நோக்கமற்று செயல்படும் அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஆவணப்படுத்தியும் அதற்கு எதிராக போராடியும் வருகிறது. ஊடகச்சுதந்திரம் உள்ள நாடுகளின் தரவரிசை அட்டவணையை இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும். அதேபோல், இந்தாண்டுக்கான அட்டவணையை நேற்று (ஏப்ரல் 21) வெளியிட்டது.
ஊடகச்சுதந்திரம் உள்ள நாடுகளின் அட்டவணையில் 180 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில், இந்தியா இரண்டு இடம் பின்னுக்குச் சென்று 142ஆவது இடத்தில் உள்ளது. இந்த அட்டவணயைில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 145ஆவது இடத்திலும் வங்கதேசம் 151ஆவது இடத்திலும் உள்ளன. இந்த அட்டவணையில் சீனா 177ஆவது இடத்திலும் வடகொரிய கடைசி இடமான 180ஆவது இடத்திலும் உள்ளன. ஊடகச் சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் நார்வே உள்ளது.