உலகளாவிய பட்டினி அட்டவணை (Global Hunger Index-GHI) 2020இல் 107 நாடுகளில் இந்தியா 94ஆவது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆண்டு வெளியான அட்டவணையில் 117 நாடுகளில் இந்தியா 102ஆவது இடத்தை பிடித்திருந்தது.
இந்த GHI 2020இல் இந்தியாவை பின்னுக்குத்தள்ளி வங்கதேசம், மியான்மர், பாக்கிஸ்தான் 75,78,88 ஆகிய இடங்களில் உள்ளன. இதற்கு சரியான கண்காணிப்பு இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாட்டை கையாள்வதில் கவனமின்மை, பெரிய மாநிலங்களின் குறைவான செயல்திறன் ஆகியவற்றை காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அண்டை நாடுகளான நேபாளம் 73ஆவது இடத்திலும், இலங்கை 64ஆவது இடத்திலும் இருக்கின்றன. இதனால் இவை தீவிரமான பட்டினி பிரிவில் இல்லாமல் மிதமான பட்டினி பிரிவில் உள்ளன.
சீனா, பெலாரஸ், உக்ரைன், டர்க்கி, கியூபா, குவைத் போன்ற 17 நாடுகள் இந்த அட்டவணையில் முன்னிலை வகிக்கின்றன.
இந்த GHI வெளியிட்ட அறிக்கையின்படி, 14 விழுக்காடு மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக இருக்கின்றனர். சுமார் 130 கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் நாட்டில் 14 விழுக்காடு என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் தங்களது வயதுக்கு குறைவான உயரத்தில் (stunting rate) 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 37.4 விழுக்காடு உள்ளனர். இது அவர்களின் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டை உணர்த்துகிறது. தங்களது உயரத்துக்கு நிகரான எடையுடன் (wasting rate) இல்லாமல் இருக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 17.3 விழுக்காடு உள்ளனர். 3.7 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்கு கீழ்) இறந்துவிடுவதாக இந்த அட்டவணை குறிப்பிடுகிறது.