டெல்லி: கோவிட் -19 அச்சுறுத்தலை முன்கூட்டியே உணர்ந்து, நிலைமையை எதிர்கொள்ள விஞ்ஞான சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையை இந்தியா பின்பற்றியது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
பேரழிவு மீள்ச்சிக்கான உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் ஐ.நா.வின் பேரழிவு அபாயக் குறைப்புக்கான அலுவலகத்தில் (UNDRR) பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
"பில்ட் பேக் பெட்டர்: மீளக்கூடிய சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல்" என்ற தலைப்பில் பேசிய அவர், "கோவிட் -19 பிரச்னை வெடித்து கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது.
உலகின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்று குறைந்து கொண்டே வருகிறது, பலர் இரண்டாவது, மூன்றாவது அலைத் தொற்றை அனுபவித்து வருகின்றனர். அதிருஷ்டவசமாக, இந்தியாவில், கோவிட் தொற்றின் பாதிப்புகள் சீராக குறைந்து வருகின்றன.
அச்சுறுத்தலை நாங்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டோம், அறிவியல் சான்றுகள் அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றினோம்" என்றார்.
முன்மாதிரி இல்லாத இந்த நெருக்கடியைக் கையாள இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், "தொற்றைக் கண்டறியும் சோதனைகள், பிபிஇ (தனிநபர் பாதுகாப்பு கவச உடை) உற்பத்தி, மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையே அதிகப்படுத்துதல் என, எங்களின் தற்போதைய திறன்களை விரிவுபடுத்துவது முதல் வேலையாக இருந்தது.
நாங்கள் பிரச்னையை, அதிதீவிரமாக நம்பமுடியாத வேகத்தில் பரவுவதை உணர்ந்தோம். கோவிட் - 19 தொற்று நோய்க்கு முன்னர் பிபிஇ.,களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்த இந்தியா, இப்போது பிபிஇ.,க்களின் ஏற்றுமதியாளராக உள்ளது என்றார்.
மேலும், தொற்று நோய் பரவலின் போது உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள சில நல்ல நடைமுறைகள் " பரவலாக்க வேண்டும்" என்றும் கூறினார்.
பேரழிவை எதிர்கொள்ளுதல் என்பது உலகின் பொதுத் தேவையாக உள்ளதை வலியுறுத்திய அவர், "கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவும் உலக நாடுகளும் பொருளாதார மற்றும் மனித வளர்ச்சியில் முன் எப்போதும் இல்லாத முன்னேற்றத்தைக் கண்டன. இருந்த போதிலும், நமது அமைப்பு முறைகள் நெகிழக்கூடிய தன்மையில் இல்லாவிட்டால் இந்த முன்னேற்றமெல்லாம் பெரும் ஆபத்தில் உள்ளது என, கோவிட் - 19 நமக்கு காட்டியிருக்கிறது. இந்க தொற்று நோய் தந்த முக்கிய படிப்பினை என்னவென்றால், தனிப்பட்ட நாடுகளாகவும், சர்வதேச சமூகமாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான நமது தேடல் நெகிழ்வுடன் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஹத்ராஸ் வழக்கு: 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்