சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக், இறக்கும் வரையிலான தன் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். இதனால் இந்த இடம் சீக்கியர்களுக்கு முக்கியமான வழிபாட்டுதலமாகக் கருதப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்ட குருத்வாராவைக் காண, இந்திய சீக்கியர்கள் விசா பெற்றுக் கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 550ஆவது குருநானக் ஜெயந்தி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, விசா இல்லாமல் இந்திய சீக்கியர்களை கர்தார்பூருக்கு அனுமதிக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்தது.
இந்திய - பாக். நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி?! - கர்தார்பூர் வழித்தட திட்டம்
சண்டிகர்: கர்தார்பூர் வழித்தட திட்டம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இருந்தபோதிலும், கர்தார்பூர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கிடையிலான சில மாற்றுக் கருத்து நிலவியதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. பக்தர்களை அனுமதிக்க பாகிஸ்தான் சேவைக் கட்டணம் கேட்பதாகவும், குருத்வாராவுக்குள் இந்திய தூதரக அலுவலரை அனுமதிக்க பாகிஸ்தான் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முக்கியமான நாட்களில் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க, இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், இதனையும் பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது, இந்திய - பாகிஸ்தான் நல்லுறவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.