தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - நேபாளம் பூசல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் - சி. உதயபாஸ்கர் - நேபாளம் வரைபட விவகாரம்

இந்தியா, நேபாளத்துக்கு இடையே உள்ள தனித்துவம் வாய்ந்த உறவு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பூசல் குறித்தும் முன்னாள் ராணுவத் தளபதி சி. உதயபாஸ்கர் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ..

Nepal
Nepal

By

Published : Jun 6, 2020, 6:48 AM IST

நேபாள அரசு மே31ஆம் தேதி, யாரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் சில பகுதிகளைத் தன்னுடைய வரைபடத்தில் சேர்ப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்தை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்னதாக கைலாஷ் மானசரோவர் பகுதிக்கு இந்தியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் விதமாக பிரத்யேக லிபுலேக் பகுதியில் புதிய வழித்தடத்தை இந்தியா தொடங்கிவைத்தது. இதன் பின்னணியிலேயே இந்த வரைப்படம் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் வரைபடத்தை மாற்றியபோது காலாபானி, லிபுலேக் பகுதிகளை வரைபடத்தில் இணைத்ததே இந்த பூசலுக்கு அடிப்படை காரணமாக மாறியுள்ளது. இந்த பகுதிகள் நேபாளத்துடன் சேர்ந்ததே என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் தூண்டுதலின் பேரில்தான் நேபாளம் இவ்வாறு செயல்படுகிறதோ என சந்தேகிப்பதாக ராணுவ தளபதி நர்வானே தெரிவித்த கருத்து விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றது.

இரு நாட்டு உறவும் 1950ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடங்கி மிகவும் சுமூகமாகவே இருந்துவந்துள்ளது. குறிப்பாக, இரு நாட்டு குடிமக்களும் எல்லைகளைக் கடந்து எளிமையாக பழகும் சூழலே இரு நாட்டு உறவின் சிறப்பம்சத்தை வெளிப்படுத்தும்.

சொல்லப்போனால் நேபாளத்தைச் சேர்ந்த கூர்க்கா இனமக்களுக்கு இந்திய ராணுவத்தில் பிரத்தியேக இடமளித்து தளபதி போன்ற உயர் பொறுப்பில் வைக்கும் அளவிற்கு இரு நாட்டு உறவுக்கு தனித்துவம் இருந்துவருகிறது.

இந்தியா - சீனா என்ற இருபெரு நாடுகளுக்கு மத்தியில் சிறிய நாடாக இருக்கும் நேபாளம், 2006ஆம் ஆண்டில்தான் மன்னராட்சி முறையிலிருந்து ஜனநாயகத்திற்கு மாற்றம் கண்டது. இதுபோன்ற சூழலில்தான் இந்தியா - நேபாளம் உறவில் சோதனைக் காலம் தொடங்கியது.

புத்தரின் பிறப்பிடமான நேபாளத்தில் இந்துக்களே பெரும்பான்மையாக இருக்கு நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இரு நாட்டு உறவில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் கொள்கைகளுடன் நெருக்கமாக இருப்பது ஒரு முக்கிய காரணம்.

இந்தியா - நேபாளம் - சீனா என மும்முனை எல்லைச் சிக்கலில் பல ஆண்டுகளாகவே தீர்க்கப்படாத விவகாரங்கள் நிலுவையில் உள்ளன. பிரிட்டானிய காலணியாதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைந்த காலத்தில், இந்தியாவை ஒப்பிடும் போது மிகச் சிறிய நாடுகளும் விடுதலைப் பெற்றன.

இந்தப் பின்னணியில் சீனாவும் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், இந்தப் போட்டிக்கான மையக்களமாக சிறிய நாடுகள் உள்ளன.

தற்போதைய லிபுலேக் பகுதி பிரச்னை 1816ஆம் ஆண்டு பிரிட்டானிய காலணி ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டே தற்போதுவரை நீட்டித்துவருகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று 1950ஆம் ஆண்டுக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் லிபுலேக், காலாபானி, லிம்பியாதூரா ஆகிய பகுதிகள் இந்தியாவைச் சேர்ந்ததாக வரையறுக்கப்பட்டுள்ளன.

1962ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஏற்பட்ட அனுபவம், தற்போது சீனா - நேபாளம் நெருக்கத்துடன் இணைந்து வரைபட விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கொண்டவர்கள் இந்த விவகாரத்தின் மூலம் அரசியல் லாபம் தேட முயல்கின்றனர்.

நேபாளத்தில் இந்தியா மீதான அபிப்ராயம் கலவையானது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது விதித்த கட்டுபாடுகள் தொடங்கி, தற்போதைய லிபுலேக் விவகாரம் வரை இந்தியா தன் மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ என்ற எண்ண ஓட்டம் நேபாளத்தின் மனதில் உருவாகியுள்ளது. எனவே இரு நாடுகளும் தீர்க்கப்படாத பல விவகாரங்கள் கிடப்பிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறையில் கூர்க்கா இன பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக தற்போது இராணுவத்தில் இருக்கும் 35 ஆயிரம் கூர்க்கா படையினரும், 90 ஆயிரம் ஓய்வுபெற்ற கூர்க்கா படையினரும் இரு நாட்டு உறவின் தனித்துவத்தை பிரதிபலிக்கின்றனர். இவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து இரு நாட்டு உறவை வலுசேர்க்க வேண்டியது இந்தியாவின் கடமை.

நமது அண்டை நாட்டினரின் மன ஓட்டத்தை அறித்து உணர்வுப்பூர்வமான விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடமையாகும். நேபாளத்துடனான வரைபட விவகாரம் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக எதிர்காலத்தில் விளங்கும். நேபாளத்துடனான சிறப்பு வாய்ந்த உறவு மேலும் சரிவைச் சந்திப்பதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதையும் படிங்க:சர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு 15 மில்லியன் டாலர் அளிக்க நரேந்திர மோடி உறுதி!

ABOUT THE AUTHOR

...view details