2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1979ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 விழுக்காடு குறைவாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில், இதுதான் மிகக் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியாக இருக்கும் என்றும் பேராசிரியர் கவுசிக் பாசு தெரவித்துள்ளார்.
பிளவுபடுத்தும் அரசியல் எழுச்சியடைந்துள்ளது குறித்தும், அறிவியலைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு குறித்தும் கவுசிக் பாசு கவலை தெரிவித்துள்ளார். மேலும், உலகின் பல தோல்வியுற்ற நாடுகள் செய்தது போல விமர்சனங்களை ஒட்டுமொத்தமாக நிரகரிக்கும் தவறை இந்தியா செய்யக் கூடாது என்றார்.
பேராசிரியர் கவுசிக் பாசு 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருந்தார். மேலும், இவர் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது, அவர் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பேராசிரியராகவும் உள்ளார்.
ஈநாடு இணை ஆசிரியர் என்.ஸ்வா பிரசாத்துடனான நேர்காணல்
கேள்வி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20ஆம் ஆண்டில் 4.2% ஆக குறைந்துள்ளது இது 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம். மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மூன்று முதல் ஐந்து விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் என்று பல மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன. மறுபுறம், கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாம் இப்போது எந்தளவுக்கு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்? தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு மோசமாக உள்ளது?
இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. மந்த நிலையின் ஒரு பகுதி புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒரு மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல, உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது பொதுவாக ஒரு நாட்டின் தரத்தைக் குறைக்காது.
ஆனால், சமீப காலங்களாகவே, இந்தியா கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச மதிப்பீடுகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. 43 முக்கியப் பொருளாதாரங்கள் குறித்த எகனாமிஸ்ட் பத்திரிகை, ஒவ்வொரு வாரமும் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவரிசையை வெளியிடும். பல ஆண்டுகளாக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியா முதல் மூன்று இடத்திற்குள் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா 23ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்தப் பெரும் மந்த நிலை என்பது தொற்று பரவலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட விதம் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னர், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 20 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது உலகில் மற்ற அனைத்து நாடுகளையும்விட அதிகம்.