இந்தியா-ஜப்பான் நாடுகள் கூட்டுறவை மேம்படுத்தும் விதமாக அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இரு நாடுகளும் புதிய அணியை உருவாக்குவதாக சீனாவின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இரு நாடுளின் கூட்டுறவு எந்தவொரு நாடுகளுக்கும் எதிரான நோக்கில் ஏற்படுத்தப்படவில்லை என வெளியுறவுத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் முன்னணி ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ்சில், சின்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் குவிங் பெங் “Hard for India, Japan to form a united front against China” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
அதில், ஜப்பானை பயன்படுத்தி, சீனாவை இந்தியா முடக்க நினைத்தால் அந்தத் திட்டம் தோல்வியில் முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா சீனாவுக்கு இடையே எல்லையில் நடைபெற்ற மோதலை சுட்டிக்காட்டி இந்த கருத்தை அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.
மேலும் அந்த கட்டுரையில் அவர் கூறியதாவது, 'இரு தரப்பும் மோதலுக்கு பின், சீனாவுக்கு அழுத்தம் தர இந்தியா பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. அத்துடன் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இந்தியா தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ஆனால் இந்தியாவின் இந்த முயற்சிகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு போதும் மேம்படுத்தாது. கரோனா பாதிப்பு காரணமாக இந்தியா கண்டுள்ள பொருளாதார பாதிப்பு தீவிரமானது. சீனாவை முடக்க நினைத்து இந்தியா செயல்பட்டால் அது இந்தியாவுக்குதான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சீனாவை எதிர்க்கும் அளவிற்கு இந்தியாவிடம் போதுமான சக்தி இல்லை என்றார்.
அதே வேளை, இந்தியா-சீனா உறவு, சீனா-ஜப்பான் உறவை விட சீனா-அமெரிக்கா உறவு மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருபக்கம் சீனாவுக்கு அழுத்தம் தரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டாலும், சிக்கலை தீர்க்கும் நோக்கில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதேபோல் ஜப்பானும் சீனாவுடன் பொருளாதார நல்லுறவுக்காக சமரசத்தையே விரும்பும். எனவே இரு நாடுகளும் சீனாவுக்கு எதிராக அதிதீவிரப்போக்கை கடைபிடிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றுள்ளார்.