உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 30 நாள்கள் முடிந்துள்ளன.
இந்நிலையில், ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட நன்மைகள், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த மூத்த ஐஏஎஸ் அலுவலர் மிஸ்ரா பேசுகையில்,
"ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவு நாட்டு மக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தியபோதும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா தற்போது நல்ல நிலையில் உள்ளது.
கரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தொடர்ச்சியாகச் சோதனைகள் செய்வது, எதிர்காலத்திற்கான தயாரிப்பை மேற்கொள்வது உள்ளிட்ட பன்முக வியூகங்களைக் கடைப்பிடித்தோம்.
கடந்த ஒரு மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்வதற்கான சோதனை முறையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மார்ச் 23 அன்று, நாடு முழுவதும் 14 ஆயிரத்து 950 சோதனைகளை நடத்திருந்த நிலையில், ஏப்ரல் 22ஆம் தேதிவரை, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 30 நாள்களில் வைரஸ் பாதிப்புக்கான சோதனையை 24 மடங்கு அதிகரித்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் விழுக்காடு உயரவில்லை.