தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் சமூகப் பரவல்? - ஆம் சொல்லும் மாநில அரசு; மறுக்கும் மத்திய அரசு! - சமூக பரவல்

டெல்லி: டெல்லியில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதாக அம்மாநில அரசு கூறியிருந்த நிலையில், மத்திய அரசு அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

Community Transmission
Community Transmission

By

Published : Jun 11, 2020, 7:49 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் புதிதாக ஆயிரக்கணக்கானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக, டெல்லியில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்குகிறது.

அடுத்த 10 நாள்களில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டும் என்றும், இம்மாத இறுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தரை லட்சத்தைத் தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "பொதுமக்களுக்கு யார் மூலம் தங்களுக்கு கரோனா பரவியது என்பது தெரியவில்லை என்றால், அதை நாங்கள் சமூகப் பரவல் என்கிறோம். டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களுக்கு யார் மூலம் கரோனா பரவியது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா டெல்லியில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ஆனால், மத்திய அரசு இதுவரை அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகப் பரவல் என்பது துறை ரீதியான சொல். அதை எங்களால் அறிவிக்க முடியாது. மத்திய அரசுதான் அதை அறிவிக்க வேண்டும்" என்றார்.

டெல்லி அரசின் இந்தக் கருத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அக்கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறுகையில், "சமூகப் பரவல் குறித்த விவாதம் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், இதுவரை உலகச் சுகாதார அமைப்பு சமூகப் பரவல் என்றால் என்ன என்பது குறித்து விளக்கவில்லை.

நாட்டில் கரோனா பரவல் என்பது குறைவாகவே உள்ளது. இந்தியாவில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான மக்களுக்கே கோவிட்-19 பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பரவல் நகரங்களில் சற்று அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதைவிட சற்று அதிகமாகவுள்ளது. எனவே, இந்தியாவில் சமூகப் பரவல் என்பது இல்லை என்று நிச்சயமாகக் கூறலாம்" என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையிலும் கரோனா பாதிப்பு 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது; கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 798ஆக உயர்ந்துள்ளது.

"மும்பையின் குடிசைப் பகுதிகளில் தகுந்த இடைவெளி என்பதைப் பின்பற்ற முடியாது. அறிகுறி இல்லாதவர்கள் குறித்தும் இங்கு முறையான விழிப்புணர்வு இல்லை. மும்பையில் சமூகப் பரவல் ஏற்பட்டுவிட்டதாகவே நான் நம்புகிறேன்" என்று தாராவி பகுதியில் பணிபுரியும் மருத்துவர் திலீப் ஷெட்டி தெரிவித்தார்.

ஆனால், மத்தியச் சுகாதாரத் துறை இந்தியாவில் சமூகப் பரவல் என்ற கருத்தை முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை முறையாகக் கண்டறியும் பணிகளைச் செய்யவில்லை என்றால், கரோனா யாரிடமிருந்து ஒருவருக்கு வந்திருக்கக் கூடும் என்பதை அறிவதில் சிக்கல் ஏற்படக்கூடும். இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கரோனாவிலிருந்து பாதுகாக்குமா? - புதிய ரிப்போர்ட்

ABOUT THE AUTHOR

...view details