கடந்த சில நாள்களால நாட்டில் ஒரேநாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் (ஆகஸ்ட் 2) புதிதாக 52 ஆயிரத்து 972 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஆகஸ்ட் 3) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து மூன்று ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் 771 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதுவரை 11 லட்சத்து 86 ஆயிரத்து 203 பேர் இத்தொற்றிலிருந்து மீண்டு முழுமையாக குணமடைந்தனர். அதனடிப்படையில் தற்போது ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 357 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் தொடர்ந்து நீடிக்கிறது.