கரோனா கால நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக பல்வேறு மருந்துகள் மற்றும் உபகரணங்களை நேபாளத்திற்கு வழங்கி இந்தியா மீண்டும் உதவி புரிந்துள்ளது. நேபாளத்திற்கென புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியத் தூதர் வினய் மோகன் குவாட்ரா, தான் பதவியேற்றவுடன் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 23 டன் அத்தியாவசிய மருந்துகளை நேபாளத்திற்கு வழங்கினார்.
மேலும், கடந்த மே 17ஆம் தேதி கரோனா பரிசோதனைக் கருவிகளையும் அவர் நேபாளத்தின் சுகாதார அமைச்சரிடம் வழங்கினார். இந்தியாவைச் சேர்ந்த மைலாப் நிறுவனம் தயாரித்த 30 ஆயிரம் பிசிஆர் கருவிகள் நேபாளத்து மக்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உதவியாக அமைந்தது.
நேபாளத்தில் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்தபோதும், பல உயிர் காக்கும் வென்டிலேட்டர்களை இந்தியா அனுப்பியது. கடந்த 9ஆம் தேதி குவாட்ரா 28 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 10 வென்டிலேட்டர்களை நேபாள ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
”கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு உலகளாவிய பொருளாதார சீர்குலைவு மற்றும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொற்றுநோயை எதிர்த்து இந்தியாவிலும் நேபாளத்திலும் போராடும் சுகாதாரப் பணியாளர்கள், சட்ட அமலாக்க அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், முன் களப் பணியாளர்கள் என அனைவரது தைரியத்திற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என்று குவாட்ரா கூறினார்.
நேற்று (ஆக. 16) வரை நேபாளத்தில் மொத்தம் 26 ஆயிரத்து 660 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 ஆயிரத்து 335 பேர் குணமடைந்துள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர்.