அயோத்தி தீர்ப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியதாகவும் அந்தக் கடிதத்தில், 'இந்து நாடு அமைக்க மகத்தான பங்களிப்பு' எனக் குறிப்பிட்டிருந்ததாகவும் போலியான கடிதம் ஒன்று கடிதம் ஒன்று பரவிவருகிறது.
இந்தக் கடிதத்தை வங்கதேச ஊடகங்கள் திருப்பி திருப்பி ஒளிபரப்பி வருகின்றன. இது கடும் கண்டனத்துக்குரியது என இந்திய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “இதுபோன்ற போலி, தீங்கு விளைவிக்கும் செய்திகளை வேண்டுமென்றே பரப்புதல், சமூகங்களை பிளவுபடுத்துதல், ஒற்றுமையை சிதைக்கும் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு நீடித்துவருகிறது.
இதனை சீர்குலைக்கும் வகையிலான இந்தக் கடிதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது முற்றிலும் போலி, தீங்கு விளைவிக்கும் கடிதம்” எனக் கண்டித்துள்ளார்.
மேலும் அவர் ட்வீட்டில், டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் கடிதம் ஒன்றையும் இணைத்திருந்தார். அந்தக் கடிதத்தில், “முற்றிலும் போலியான தீங்கு விளைவிக்கும் கடிதம் ஒன்று பரவிவருகிறது. இது வங்கதேச மக்களை தவறாக வழிநடத்தவும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.
இந்தியாவைப் பற்றி தவறான புரிதலை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இது பரப்பப்பட்டுவருகிறது. இவ்வாறு போலிகள், தீங்கு விளைவிக்கும் தகவல்களைப் பரப்புவது மோசமானது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அயோத்தி நிலப் பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த சனிக்கிழமை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.