இந்தியா- சீனா படைகள் இடையே கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ஆம் தேதி வன்முறை வெடித்தது. இந்தத் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். இந்தக் கூட்டம் இன்று (ஜூன்19) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், கிழக்கு லடாக்கில் இந்தியப் படைகளுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே நேருக்கு நேர் நடந்த வன்முறை தாக்குதல் தொடர்பாக விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் சீனாவின் எல்லையில் அதிகரித்துவரும் பதற்றம் குறித்த குழப்பத்தை நீக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டனர்.
இந்நேரத்தில் பிரதமர் மோடி இந்தச் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம், எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
1962ஆம் ஆண்டு இந்தியா-சீனப் போருக்குப் பிறகு, எல்லையில் அதிக வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. முன்னதாக 1975ஆம் ஆண்டில் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில், எல்லைகளில் நாட்டின் பாதுகாப்புக்கு முன்வைக்கப்பட்ட சவால்கள் குறித்து நடக்கும் மூன்றாவது அனைத்துக் கட்சிக் கூட்டமாக இது இருக்கும். இதற்கு முன்பு, உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல், துல்லிய தாக்குதலின்போது அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 8 மாநிலங்கள், 19 இடங்கள், வெல்லப்போவது யாரு? மல்லுக்கட்டும் காங்கிரஸ், பாஜக!