இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் கடந்த மாதம் இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தை குவித்ததால், போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இது குறித்து இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து வீரர்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் சீன வீரர்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், எத்தனை சீன வீரர்கள் இதில் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த தகவலை சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சீனா அத்துமீறல் சம்பவத்திற்கு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்தன. மேலும், இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பின.
இந்நிலையில், பிரதமர் மோடி சீனா தாக்குதல் விஷயத்தில் தற்போது முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார். இந்தியா - சீனா மோதல் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜூன் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்துள்ளார்.
நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் காணொலிக் காட்சி வழியே நடைபெறும் என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'சீனத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தகவல் எங்கே?' - ப.சிதம்பரம்