எல்லை பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முன்கள ராணுவ படைகளை முன்கூட்டியே திரும்ப பெற்று கொள்ள இந்திய, சீன நாடுகள் ஒப்பு கொண்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய, சீன உயர் மட்ட ராணுவ அலுவலர்களிடையே மோல்டோவில் 16 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எல்லைப் பகுதியில் படைகளை திரும்ப பெற்று கொள்ள இந்தியா, சீனா ஒப்புதல்! - இந்திய சீன எல்லை பிரச்னை
இந்திய - சீன ராணுவ உயர் மட்ட அலுவலர்களுக்கிடையில் நடந்த 9 ஆவது கட்ட பேச்சுவார்த்தையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள முன்கள வீரர்களை, முன்கூட்டியே திரும்ப பெற்றுக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லை பிரச்னையை தீர்த்து கொள்வதற்காகவும் கிழக்கு லடாக் பகுதியில் ராணுவ படைகளை திரும்ப பெற்று கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நல்ல விதமாக பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் இருநாட்டு தலைவர்களின் ஒருமித்த முடிவுகளை பின்பற்றவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மட்ட ராணுவ அலுவலர்களிடையேயான 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையை முன்னதாகவே நடத்தி ராணுவ படைகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் நடைமுறைக்கு சாத்தியமாகவும் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை, புரிதல் இதனால் மேம்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.