தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 11, 2020, 11:28 AM IST

ETV Bharat / bharat

இந்தியா-சீனா மோதல்: தகராறை சுமுகமாகத் தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு ஒப்புதல்

மாஸ்கோ: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் நிலவிவரும் தகராறை சுமுகமான முறையில் தீர்க்க ஐந்து அம்ச திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன.

India, China agree on 5-point pla
India, China agree on 5-point pla

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்திய வெளிறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்குச் சென்றுள்ளார். எல்லையில் ஏற்படும் பதற்றத்தைத் தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, காஷ்மீரின் லடாக் பகுதியில் சமீபகாலமாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் தனது கவலைகளை சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பிற்குப் பின் இரு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இருநாடுகளுக்கும் இடையே எல்லையில் நிலவிவரும் தகராறை சுமுகமான முறையில் தீர்க்க ஐந்து அம்ச திட்டம் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து அம்ச திட்டம்

  1. இந்தியா-சீனா உறவுகளை வளர்க்க இருநாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதல்களின்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை தகராறாக மாற அனுமதிக்கக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
  2. எல்லையில் தற்போது நிலவும் நிலைமை இரு நாட்டிற்கும் நல்லதல்ல என்பதை இரு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். எனவே இரு நாடுகளின் எல்லைப் படையினரும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, விரைவாகப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதுதவிர இரு நாட்டு வீரர்களும் எல்லையில் சரியான இடைவெளியைப் பராமரிக்க வேண்டும் என்று இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
  3. சீனா-இந்தியா எல்லை தொடர்பாக தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்களுக்கும் நெறிமுறைகளுக்கும் இருதரப்பும் கட்டுப்படுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது. எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
  4. இந்திய-சீன எல்லைப் தகராறைத் தீர்க்க சிறப்பு பிரதிநிதி மூலம் தொடர்ந்து உரையாடலை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
  5. எல்லைப் பகுதிகளில் அமைதி பேணுவதற்கு இருநாடுகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இருதரப்பினரும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

முன்னதாக, ரஷ்யா சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, கடந்த சனிக்கிழமை சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய் பெங்கே சுமார் இரண்டு மணி நேரம் வரை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

ABOUT THE AUTHOR

...view details