உலகம் நாடுகளின் செயல்பாடுகள் அனைத்தும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முடங்கியுள்ளன. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உலக சுகாதார அமைப்பால் அளிக்கப்படும் ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை முறையை இந்தியா தொடங்கியுள்ளது. இதற்கு தேவையான ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறை ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் ஒன்பது தளங்கள் அமைப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ஷீலா காட்போல் கூறியுள்ளார்.
சோதனையின்போது ரெம்டெசிவிர், ஹைட்ராக்ஸி குளோரோகுயின், லோபினாவிர்-ரிடோனாவிர், லோபினாவிர்-ரிடோனாவிர் வித் இன்டர்ஃபெரான் (பி 1 ஏ) உள்ளிட்ட நான்கு வைரஸ் தடுப்பு மருத்துகளை நோயாளிகளுக்கு செலுத்தி மதிப்பீடு செய்யப்பட உள்ளதாக, இந்த சோதனையின் தேசிய ஒருங்கிணைப்புத் தளமாக விளங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், வைரஸால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளை சோதிக்க முடியும், அவர்களுக்கு மருந்துகள் செலுத்துவதன் மூலம் நோயின் தாக்கம் குறைகிறதா என்பதை விரைவாகக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த வழிமுறை கரோனா வைரஸ் நோய்க்கான சரியான சிகிச்சையை கண்டறிய உதவும்" என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் ஹென்க் பெக்கெடம் கூறுகையில், "உலகளாவிய ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனையில் இணைந்ததற்காக இந்திய அரசை குறிப்பாக ஐ.சி.எம்.ஆரை வாழ்த்துகிறோம். இந்த ஒத்துழைப்பின் மூலம், இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கோவிட் -19க்கு உரிய சிகிச்சையை கண்டறிய உலகளாவிய முயற்சியில் பங்கேற்கின்றன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்தவுடன் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி இரண்டிலும் இந்தியா ஒரு முக்கிய பங்குவகிக்கும்" என்றார்.
இதையும் பார்க்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்