கரோனாவின் மையமான சீனாவின் வூஹானைக் குறிப்பிடாமல், வைரஸ் தொற்று உருவாக்கம் குறித்த சுதந்திர விசாரணைக்கோரி 62 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. உலக சுகாதார சபையின் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் விசாரணை என்ற வார்த்தையை குறிப்பிடாமல் சாதுரியமாகத் தவிர்ந்து ஆய்வு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்பேனியா, வங்கதேசம், பெலாரஸ், பூட்டான், பிரேசில், கனடா, இந்தோனேசியா, ஜப்பான், நியூசிலாந்து, நார்வே, தென் கொரியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட 62 நாடுகளில் இந்தியாவும் இந்த தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது. இந்த தீர்மானத்தில் வல்லாதிக்கமான அமெரிக்கா பங்கேற்காத நிலையில், தாக்குதலின் மையப்புள்ளியான சீனாவும் ஒதுங்கிக்கொண்டது.
இந்த தீர்மானத்தில் கரோனா பெருந்தொற்றின் மையமான சீனாவை எந்த விதத்திலும் குற்றஞ்சாட்டவில்லை. அதேவேளை, உலக சுகாதார மையத்தின் விலங்கியல் பிரிவு இந்த நோய் தொற்றின் மூலம், மனிதர்களுக்குள் இந்த வைரஸ் எப்படி நுழைந்தது என்பதை கண்டறிய முழு முயற்சியில் களமிறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மரீஸ் பயின் தனது அறிக்கையில், கரோனா குறித்த உன்மையை உலக நாடுகள் அறியவும் சுதந்திர விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது உலக நாடுகளை சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய ஏதுவாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பெருந்தொற்றில் நாம் பெறும் பாடம் எதிர்காலத்தில் நம் குடிமக்களை பாதுகாக்கும் என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.