நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது.
ஒரு கட்டத்தில் உலகிலேயே அதிகளவிலான ஒரு நாள் கரோனா பாதிப்பு இந்தியாவில் தான் பதிவாகி வந்தது. உயிரிழப்புகளும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
வைரஸ் மின்னல் வேகத்தில் பரவியும் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்த நிலையில், இன்று நாட்டில் சமூக பரவலாக கரோனா மாறியுள்ளது உண்மை தான் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தின் வாயிலான ஞாயிறு சம்வத்-6ஆவது நிகழ்ச்சியில் தம்முடன் உரையாடிவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பதில் அளித்தார்.
அப்போது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதே போல், வேறு மாநிலங்களிலும் தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதாக என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்கள் அல்லது மக்கள் கூட்டம் அதிகம் வசிக்கும் நகரங்களில் மட்டுமே சமூக பரவலாக கரோனா தொற்று மாறியுள்ளது. நாடு முழுவதும் சமூக பரவலாக மாறவில்லை" எனத் தெரிவித்தார்.
பல மாதங்களாக கரோனா சமூக பரவலாக மாறவில்லை என அரசு கூறிவந்த நிலையில், திடீரென ஒப்புக்கொண்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதில், பண்டிகை கொண்டாடத்தில் கரோனா விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மாநிலத்தில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறி காற்று மூலம் பரவி கொண்டிருக்கிறது என எச்சரித்தார்.