பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21 ஆக உயர்த்திய மத்திய அரசின் முடிவு மேம்போக்கானது என்றும், ஆனாலும் தாய், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை சற்று மேம்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், இந்நடவடிக்கை பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இச்சட்டத்தால் பாலின சமத்துவம், பெண்கள் உரிமைகள் அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதாக வழிவகுக்காது என்றும், அவர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது, நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகள் உரிமைகளுக்கான நிபுணர்கள் இம்முடிவை விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக பெண்கள், குழந்தைகளுக்கான அமைச்சகத்தால் கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட செயற்குழு, சிவில் சொசைட்டி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளனர். பருவ வயது, இள வயதினர், குழந்தைகள், பெண்கள் உரிமைகள் குறித்து பல காலமாக ஆராய்ச்சிகள், சட்டப்பூர்வ செயலாக்கங்களை மேற்கொண்டு வரும் 100க்கும் மேற்பட்ட அமைப்புகள், இது தொடர்பாக தங்கள் சார்பில் மூன்று கோரிக்கைகளை செயற்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஆழ்ந்த காரணங்களின்றி, திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் எவ்விதமான மாற்றங்கள் ஏற்பட்டு விடும் என்று அரசுக்கு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏராளமான பெண்களின் திருமண நிலை, அவர்களுக்கான உரிமைகள் குறித்த பாதுகாப்பின்மை நிலவும் சூழலில், திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் எப்படி முன்னேற்றம் ஏற்படும் என்று தங்கள் கூட்டறிக்கையில் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை சிறுவயதிலேயே வேலைக்கு கட்டாயப்படுத்தும் குற்றச்செயலைச் செய்யும் பல குடும்பங்கள், இந்த அறிவிப்பால் பெண்களுக்கு திருமணம் செய்யாமல் தங்கள் சுயநலத்திற்காக பல ஆண்டுகள் பெண்களை வேலைக்கு அனுப்பி ஆதாயம் தேடுவார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் “திருமண வயதை அதிகரிப்பதன் மூலம் பாலின சமத்துவம், பெண்களின் உரிமைகள், முன்னேற்றம் ஆகியவற்றுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ஆயினும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று அதிகரிக்கும்” என்று தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். "ஆண்களைப் போலவே பெண்களுக்கும் 21 வயதை நிர்ணயித்தால் சமத்துவம் ஏற்பட்டு விடும் என்பது மேம்போக்கான எண்ணம், ஆனாலும் சுதந்திரத் தன்மைக்கு இது சற்று உதவி செய்யும்” என்று 100க்கும் அதிகமான அமைப்புகள் மற்றும் 2500 இள வயதினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தைத் திருமணம் ஏற்கனவே குறைந்துள்ள நிலையில், இந்நடவடிக்கை தேவையற்றது, இதற்குப் பதிலாக பெண்களுக்கான பள்ளிக்கல்வி, வேலைகளுக்கு நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் கருத்து தெரிவித்துள்ள பெண்கள் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குநரான மேரி இ ஜான் கூறும் போது,”மக்கள் தற்போது நன்கு படித்து, வேலைகளுக்குச் சென்று அதன்பின் திருமணம் செய்கின்றனர்.
அதனால் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதால் எந்த மாற்றமும் முன்னேற்றமும் வந்து விடாது, அதே நேரம் ஏழைகள் 18 வயதில் திருமணம் செய்யாமல் 3 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்வதால் அவர்களுக்கு வளமான வாழ்க்கை அமைந்து விடும் என்று கூற இயலாது. இதுபோன்ற மேம்போக்கான அறிவிப்புகளை வெளியிடுவதற்குப் பதிலாக பெண்களின் கல்விக்காக பள்ளிகள், கல்லூரிகளை அதிகளவில் ஏற்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்க வேண்டும்" என்றார்.
“வயது வேறுபாட்டு சிக்கல்கள் நம் வரலாற்றில் உள்ளன. ஒரே நாளில் வயது வித்தியாசத்தை சமமாக்கி விட்டால், ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றும் நம் சமூகத்தில் ஆண்களை விட பெண்கள் குறைந்த வயதுடையவர்களாக இருந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. மேலை நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் உடைந்துள்ளன.