இந்தியாவில் சுமார் 80 நாள்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும் கரோனா தாக்கம் குறையவில்லை. மாறாக சமீப நாள்களாக கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப், மருத்துவ கல்வித் துறை அமைச்சர் அமித் தேஷ்முக் ஆகியோருடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிராவில் அதிகரித்துள்ள கரோனா பரவல், இறப்பு ஆகியவை குறித்து தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.கே. சிங் விளக்கினார்.
அப்போது பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் கரோனா பாதிப்பு குறித்து வரைபடத்தை உருவாக்க வேண்டும், அதைப்பொருத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் சோதனைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
மாநிலத்தில் தேவையான அளவு கரோனா கண்டறியும் மையங்கள், ஐசியூ படுக்கைகள், வென்டிலேட்டர்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய, பரிசோதனை முடிவுகளை விரைவாகவும் துல்லியமாகவும் கரோனா கண்டறியும் மையங்கள் அளிக்க வேண்டும்" என்றார்.
நாடு முழுவதும் நடைபெறும் பரிசோதனைகள் குறித்துப் பேசிய அவர், "நாம் இப்போது பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளோம். தற்போது நாட்டில் 602 அரசு கரோனா கண்டறியும் மையங்களும், 235 தனியார் கரோனா கண்டறியும் மையங்களும் உள்ளன. நாட்டில் தற்போதுவரை 52,13,140 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,51,808 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 136 லட்சம் N95 ரக மாஸ்க்குகளும், 106 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு மருந்துகளை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும் கோவிட்-19 தொற்றை முழுமையாக அழிக்கும் வரை நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: இனி யாருடைய கரம்பற்றி நடப்பாள் அந்த ஏழு வயது பிஞ்சு குழந்தை