காந்திநகர் :மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்தவர் ஜிதேந்திரர். கடந்த ஏப்ரல் மாதம் இவரது மனைவி ரேணு அஞ்சனே கருத்தரித்திருந்தது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ரேணுவுக்கு கல்லீரல் பிரச்னை இருந்ததால், சிகிச்சைக்காக இந்தூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தால் குஜாரத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு செல்லுமாறு சிலர் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த ரேணுவுக்கு உடல் நலம் மிகவும் குன்றியது. எனவே குழந்தையை கலைத்துவிடலாம் என தம்பதியினர் முடிவு செய்தனர். ஆனால் சிகிச்சைக்கு பின் ரேணுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தனர். அதன்படி அவரது ஆறாவது மாதத்தில் 436 கிராம் எடைகொண்ட பெண் குழந்தை பிறந்தது.
குறை பிரசவத்தில் எடை மிகவும் குறைவாக இருக்கும் இக்குழந்தை உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறிய மருத்துவர்கள், 54 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் அக்குழந்தையின் உயிரை காப்பாற்றி சாதனைப் படைத்துள்ளனர். தொடக்கத்தில் குழந்தையின் இருதயமும், நுரையீரலும் பலவீனமாக இருந்த நிலையில், தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையின் எடை தற்போது 930 கிராமாக உயர்ந்துள்ளது எனவும் தாய் பால் கொடுக்கப்பட்டு வருதாகவும் கூறியுள்ளனர். அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இவ்வளவு எடை குறைந்த குழந்தை உயிர்பிழைத்திருப்பது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இந்த குழந்தைக்கு அவரது பெற்றோர் தக்க்ஷிதா எனப் பெயரிட்டுள்ளனர்.
குழந்தை தக்க்ஷிதாவுடன் தாய் இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜி.பி.மோடி கூறுகையில், "கரோனா காலத்திலும் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருவதை இது காட்டுகிறது. 400 கிராம் எடைகொண்ட பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பற்றியது எங்களது மருத்துவமனைக்கு கிடைக்க பெருமை" என்றார்.
இதையும் படிங்க:புகார்தாரர்களின் குழந்தைகளுக்காக குட்டி பிளே ஸ்கூலாக மாறிய காவல் நிலையங்கள்...!