நாட்டின் தலைநகர் டெல்லியில் மக்கள் வாழ்வதை கேள்விக்குறியாக்கும் வகையில், அங்கு நிலவும் காற்று மாசுபாடு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பழைய சட்டம் ஒன்றை மீண்டும் அமல்படுத்தவுள்ளார். இச்சட்டத்தின்படி கனரக வாகனங்கள் ஒற்றைப் படை எண்கள், இரட்டைப் படை எண்கள் என இரண்டாகப் பிரிக்கப்படும்.
ஒற்றைப் படை எண்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு தேதியும், இரட்டைப் படை எண்கள் கொண்ட வாகனங்களுக்கு மற்றொரு தேதியும் வழங்கப்படும். அந்தந்த தேதிகளில் மட்டும் வாகனங்களை இயக்க வேண்டும். இதனை மீறும் வாகனங்களுக்கு நான்காயிரம் ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும் என இந்தச் சட்டம் கூறுகிறது. அடுத்த மாதம் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இச்சட்டம் மீண்டும் அமலுக்கு வருமென அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார்.
இந்தச் சட்டம் பயணிகள் பேருந்து தவிர மற்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு பொருந்தும். வெளிமாநிலத்திலிருந்து டெல்லி வரும் நான்கு சக்கர வாகனங்களும் இச்சட்டத்தை பின்பற்ற வேண்டும். பள்ளி வாகனங்கள் இச்சட்டத்தை கடைப்பிடிக்கத் தேவையில்லை. அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.