இந்தியாவில் உழைப்பாளர்கள்
உழைப்பாளர்கள் பற்றிய சமீபத்திய புள்ளி விவரப்படி, அவர்களில் 25 சதவிகித கிராமப்புறக் குடும்பங்கள் மற்றும் 12 சதவிகித நகர்ப்புறக் குடும்பங்கள் தங்கள் வருவாய்க்கு தற்காலிகப் பணியையே நம்பியிருக்கின்றனர்.
அவர்களில் நகர்ப்புறத்தில் உள்ள 40 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சம்பளம் வரும் வழக்கமான பணிகளில் இருந்தாலும், பணி உத்தரவாதம் கிடையாது. விவசாயம் சாராத தொழிலிலுள்ள 70% பேருக்கு எந்தவிதமான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தமும் கிடையாது, அதில் பாதிக்கும் அதிகமானோருக்கு சம்பள விடுப்பு கிடையாது. அவர்களுக்கு சுகாதார நலன் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
கரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பியிருப்பது, மார்க்கெட், தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் முடங்கியுள்ளதால், தொழிலாளர் பலம் இல்லாமல் நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன.
இந்தச் சூழலால் தொழிற்சாலைகள் குறைந்த அளவிலேயே பொருட்களைத் தயாரிக்கின்றன. ஊரடங்கால் அத்தியாவசியப் பொருட்களின் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய நிலையில், ஆள் பற்றாக்குறையால் பணிகள் முடங்கியுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களை தயாரித்து விநியோகம் செய்வதற்கு உதவும்படி வர்த்தக சங்கங்களை டெல்லி அரசாங்கம் கேட்டுள்ளது.
சந்தைகள் நிலவரம்
பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய சந்தைகளில் வழக்கமான வேலைகளைச் செய்யவே ஆள் பற்றாக்குறை உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்குக் கொண்டு சென்று விநியோகிக்க அதிகமான ஊழியர்கள் தேவை.
போக்குவரத்து பழைய நிலைமைக்குத் திரும்பும்வரை இந்த சிக்கலுக்குத் தீர்வு இல்லை.
ஊழியர்களின் ஊதியத்துக்கும், பொருட்களின் விலைக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஊழியர்களின் ஊதியம் குறைவாக இருந்தால்தான் பொருட்களின் விலை குறைவாக இருக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் முடங்கியுள்ள வேளையில், உள்ளூர்த் தொழிலாளர்கள் அவர்களை விட அதிக ஊதியம் கேட்கின்றனர். இதனால் பல வர்த்தகர்கள் தங்கள் வேலைகளை நிறுத்திவைத்துள்ளனர்.
விவசாயம்
விவசாயப் பணியும் ஆள் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் விவசாயம் செய்துவந்த பஞ்சாப் விவசாயிகள் பலர், பருத்தி விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். நெல் விவசாயம் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துவருகிறது.