டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு டெல்லி ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இதனிடையே, கடந்த 15ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயின் மருத்துவமனையில் திடீரென்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது, சத்யேந்திர ஜெயினும் உடனிருந்தார். தற்போது சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அமித் ஷா உள்ளிட்ட மற்ற அலுவலர்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனும், டெல்லி அரசாங்கத்தின் மூத்த அலுவலர்கள் பலருடனும் சந்தியேந்திர ஜெயின் ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோல், ஜூன் 14ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், ஒரே வாகனத்தில் அமர்ந்து சத்யேந்திர ஜெயின் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது சத்யேந்திர ஜெயினுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அவர் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்ற அமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய அலுவலர்களையும் தனிமைப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சத்யேந்திர ஜெயினுடன் தொடர்பிலிருந்த மற்றவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற குழப்பத்திலும், முக்கிய தலைவர்கள் யாருக்கேனும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளனர்.
இதன் காரணமாக அமித் ஷா, ஹர்ஷ் வர்தன், அரவிந்த் கெஜ்ரிவால், அனில் பைஜால் உள்ளிட்ட பலர் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் டெல்லி - அவசர ஆலோசனையில் அமித் ஷா