உலக பொருளாதார மன்றத்தின் (WEF) ஆண்டு உச்சி மாநாட்டின் தொடக்கத்திற்கு முன்னதாக உலகப் பொருளாதாரம் குறித்த புதுப்பிப்பை வழங்கும் அதே வேளையில், சர்வதேச நாணய நிதியம் தனது இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2019ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி 4.8 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் வளர்ச்சி 5.8 விழுக்காடாகவும், 2021ஆம் ஆண்டில் 6.5 விழுக்காடாகவும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், “வங்கி சாரா நிதித்துறையில் அழுத்தம் மற்றும் கிராமப்புற வருமான வளர்ச்சி பலவீனமாக இருப்பதால் இந்தியாவில் வளர்ச்சி கடுமையாக குறைந்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பிரதிபலிக்கும் வகையில் சீனாவின் வளர்ச்சி 2020ஆம் ஆண்டில் 0.2 சதவீதம் அதிகரித்து ஆறு சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில், வங்கி சாரா நிதித்துறையில் அழுத்தம் மற்றும் கடன் வளர்ச்சியின் சரிவு ஆகியவற்றின் மத்தியில் உள்நாட்டு தேவை எதிர்பார்த்ததைவிட மிகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி 2019ஆம் ஆண்டில் 4.8 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டில் 5.8 விழுக்காடாகவும் 2021ஆம் ஆண்டில் 6.5 விழுக்காடாகவும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார். கீதா கோபிநாத் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரைசினா மாநாடு: சர்வதேச சிக்கல்கள் குறித்து உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை