கரோனா ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்னதாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் சிலர் தங்கள் பகுதிகளிலேயே சாராயம் காய்ச்சத் தொடங்கினர். இதனைத் தடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.
அந்தவகையில் நேற்று, நல்லான்பிள்ளை பெற்றாள் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பாக்கம் மலை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன்களில் சாரய ஊறல்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.