கரோனா பாதிப்பு பரிசோதனைக்கு தற்போது ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனை குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும், இந்தப் பரிசோதனைக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ள நிலையில், புதிய வகை பரிசோதனை கருவிகளை வடிவமைக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அதன்படி, ஹைதராபாத் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவிந்த் சிங், பேராசிரியர் சுரியத்சனா திரிபாதி, நான்காமாண்டு மாணவி சுப்ரஜா ஆகியோர் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கரோனா பரிசோதனைக் கருவியை வடிவமைத்துள்ளனர்.