நாடு முழுவதும் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுகாதாரத் துறையினர் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவரும் நிலையில், முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன.
இந்தியாவில் கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ள தனியார் நிலையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் பரிசோதனை மேற்கொள்ளும் திறன் உள்ளதாக ஐ.சி.எம்.ஆர். (ICMR) அமைப்புத் தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களில் சோதனைக் கட்டணம் தற்போது நான்காயிரத்து 500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில் மலிவு விலை கரோனா கண்டறிதல் சோதனை உபகரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி ஐஐடி கல்வி நிறுவன ஆய்வாளர்கள் களமிறங்கியுள்ளனர். அங்குள்ள உயிரியல் பிரிவு மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வை முனைவர் குழு மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் உருவாக்கப்பட்டுள்ள உபகரணம் தற்போது, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு மையத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் விரைவில் உபகரணம் உற்பத்திசெய்யப்பட்டு மருத்துவச் சந்தைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனாவால் உலகப் பொருளாதாரம் சரியும் அபாயம் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு