ஹைதராபாத்தில் அமைந்துள்ள தேசிய வேதியல் ஆராய்ச்சி மையமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (ஐ.ஐ.சி.டி) விஞ்ஞானிகள், கரோனா சிகிச்சைக்காக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மருந்துகளுக்கு உட்பொருட்கள் தயார் செய்வதில் வெற்றி பெற்றுள்ளனர். உள்நாட்டில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களைக் கொண்டு உள்நாட்டு மருத்து தயாரிப்பு தேவைக்கான மருந்துகள் தீவிரமாகத் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இதற்காக நாட்டின் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்களுடன், சுமார் இரண்டு மாதங்களாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். ஐ.ஐ.சி.டி.யின் மூத்த முதன்மை விஞ்ஞானிகள் டாக்டர் ராஜி ரெட்டி மற்றும் டாக்டர் பிரதம் எஸ். மயங்கர் ஆகியோர் இந்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்கள் இருவரும், இது தொடர்பாக தங்கள் கருத்தை ஈடிவி பாரத் உடன் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் பேசியதாவது, எபோலா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்கு எந்த அளவிற்கு வேலை செய்கின்றன என்பது குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கினோம். உலக சுகாதார அமைப்பால் அடையாளம் காணப்பட்ட ஐந்து மருந்துகளான ஃபாவிபிராவிர், ரெமெடிசிவிர், உமிஃபெனோவிர், போலாக்ஸாவிர், குளோரோகுயின் / ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பான மூலக்கூறுகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினோம்.
எங்கள் ஆய்வகத்தில் கோவிட் - 19 சிகிச்சைக்கான கண்டறியப்பட்ட மருந்துகளின் அடிப்படை உட்பொருட்கள் எனப்படும் ஏ.பி.ஐ. தயார் செய்யத் தொடங்கினோம். இதற்காக, மூலப்பொருட்களை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டில் கிடைக்கும் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் குறைந்தவிலை உற்பத்தி செயல்முறையை உருவாக்கியுள்ளோம். விளைவாக, மருந்தின் விலையும் மிகக் குறைவாக சந்தையில் விற்கப்படுகிறது.