பிகார் அரசியலில் நீண்ட காலமாக எதிரெதிர் நிலைகளில் இருந்த எல்.ஜே.பி மற்றும் ஜே.டி.யு ஆகிய இரண்டு கட்சிகளும் தற்போது என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளன. ஒரே கூட்டணியில் அங்கம் வகித்து வந்தாலும் இரண்டு கட்சியின் மூத்த தலைவர்களும் ஒருவரை மற்றொருவர் தாக்கி அறிக்கை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (அக்டோபர் 21) ஊடகங்களிடையே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
எல்.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிராக் பாஸ்வான் பத்திரிகையாளர்களிடையே பேசியபோது, "நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் வெற்றிப் பெற்றால், நமது மாநிலம் மிக மோசமான தோல்வியை அடையும். தவறுதலாக வெற்றி பெற்றால் கூட அது நமது மாநிலத்தை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும்.
சாதியை வைத்து அரசியல் நடத்தும், சாதி வெறியைத் தூண்டி ஆட்சி நடந்தும் அவரது தலைமையின் கீழ் பிகார் எந்த வளர்ச்சியையும் பெறவில்லை. 'பிகார் - பிகாரி' பார்வையின் அடிப்படையில் எங்களது கட்சியின் அறிக்கை அமைந்துள்ளது. பிகார் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் வகையில் எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும்.