முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலின் 100ஆவது பிறந்தநாள் விழா டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, “ஐ.கே. குஜ்ரால் அற்புத திறமைகள் நிறைந்த தலைவர். அவருடனான எனது நட்பு நீண்டகாலம் தொடர்ந்தது. அவர் திட்ட அமைச்சராக இருந்தபோது நான் பொருளாதார ஆலோசகராக இருந்தேன்.
அதன்பின்னர் எங்களின் நட்பு வளர்ந்தது. 1975ஆம் ஆண்டு அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த ஆண்டு இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது செய்தி, தலையங்கங்களை தணிக்கை செய்ய மறுத்தார். இதனால் அவர் 1976 முதல் 1980ஆம் ஆண்டுவரை சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார்.
அண்டை நாடுகளுடான நல்லுறவை பேணுவதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். இதுதொடர்பாக ஐந்து கொள்கைகளை முன்முனைந்தார். பின்னாள்களில் இது குஜ்ரால் கொள்கை என அழைக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு (சீக்கிய படுகொலை) நடந்த படுகொலை மிகவும் கொடூரமானது. அப்போதைய உள் துறை அமைச்சர் நரசிம்ம ராவிற்கு சில ஆலோசனைகளை ஐ.கே. குஜ்ரால் வழங்கினார்.