பிகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
7.29 கோடி வாக்காளர்களைக் கொண்டுள்ள பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட உள்ளன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மகா கூட்டணியில் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே இலக்காகக் கொண்டு இந்த மகா கூட்டணி இணைந்து பணியாற்றுவது மக்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஷ்வி பிரசாத் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, பிரசாத் யாதவ் மீது பாஜக கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (அக்டோபர் 20) ஊடகங்களைச் சந்தித்து பேசிய பிரசாத் யாதவ், "என்னை ஒரு அனுபவமற்ற தலைவரென பாஜகவினர் கூறுகின்றனர். நான் அனுபவமற்றவராக இருந்தால், என்.டி.ஏ கூட்டணி கட்சி தலைவர்களும், அதன் நிர்வாகிகளும் ஏன் எனக்கு எதிராக அரசியல் வேலைகளை இவ்வளவு முனைப்புடன் ஆற்றுகிறீர்கள் ?.
குறிப்பாக, உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக ஏன் எனக்கு எதிராக தனது முழு சக்தியை பயன்படுத்துகிறது?. இது அவர்களது தோல்வி பயத்தை வெளிக்காட்டுகிறது. மிகுந்த மன உளைச்சலில் சிக்கித் தவிப்பதை நிரூபிக்கிறது.
நிதீஷ் குமாரின் முகம் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டதா ? செல்லுபடியாகவில்லையா ? அதனால் தான் அவர்களது கூட்டணியில் இதுவரை முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என சொல்லப்படுவது உண்மையா ?. நான் தனியாக தான் இருக்கிறேன். ஆட்சி அதிகார பலமற்று நிற்கிறேன். இருந்தும் என்னை கண்டு அச்சப்படுகிறார்கள்.
அவர்கள் என்னை அனுபவமற்றவர்கள் என்று அழைக்கிறார்கள். நான் ஒரு எம்.எல்.ஏ. எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயக கடமைகளை சீராக ஆற்றிவருகிறேன். பிகாரின் துணை முதலமைச்சராக பதவி வகித்து ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்தியுள்ளேன்.
எனது ஐந்து ஆண்டுகால அனுபவம் 50 ஆண்டுகால அனுபவத்திற்கு சமம் என்பதை அறிந்தே உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்றவர்களை தேர்தல் பரப்புரைக்கு பாஜகவினர் அழைத்து வருகின்றனர்.
பாஜக கூட்டணி எங்களுக்கு ஒரு சவாலே அல்ல. அவர்கள் மிகவும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். விரக்தியில் உள்ளனர். அவர்கள் மீண்டும் அரசை உருவாக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்" என்று கூறினார்.