கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ''நாட்டில் நிலவிவரும் மருத்துவ அவசரநிலை சூழலை அரசு அலுவலர்கள் சிறப்பாகக் கையாண்டுவருகிறார்கள். இந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருள்கள், தேவையான பணம், மக்களின் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான பணியாளர்கள் என அனைத்தையும் அரசு நிர்வாகத்தினர்தான் முடிவுசெய்ய வேண்டும்.
நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித் துறை ஆகிய மூன்றும் இணக்கமாகச் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, நிச்சயம் நீதிமன்றம் தலையிடும். மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நீதித் துறையின் பணி. அதனை எப்போதும் சரியாகச் செய்யும்.
கரோனா வைரஸ் சூழலில் மக்களுக்குத் தேவையான உணவு, இருப்பிடம், மக்களுக்கு ஏற்படும் உளவியல் ஆலோசனைகள் என அனைத்தையும் செய்வதற்கு மத்திய அரசுக்கு வழிகாட்டியுள்ளோம்.