துணிக்கடையில் பணிபுரியும் 40 வயது தக்க ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால், அவருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் கரோனா சோதனை மேற்கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
முதலில், அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்தது. ஏழு நாள்களுக்கு பிறகு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. நான்கு வாரங்கள் ஆன பிறகும் கூட, கடையின் உரிமையாளர் அவரை பணியில் மீண்டும் அமர வைக்க மறுக்கிறார். ஒரு மாதமாக பணிக்கு செல்லாததால் அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடினங்கள் இருப்பதாக அவர் கவலை தெரிவிக்கிறார். இதே நிலைமைதான் வீட்டில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இதேபோல் எண்ணிலடங்காதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு மேலாக அவர் பணிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. கரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழ் இல்லையெனில் குணமடைந்தோரை பணியில் சேர்த்துக் கொள்ள உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.