பாகிஸ்தான் நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கப்பற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவுக்கு, கடந்த ஏப்ரல் 10, 2017 அன்று அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், அந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர், குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்த சர்வதேச நீதிமன்றம், மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானுக்கு நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு முக்கிய தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளை தற்போது காணலாம்:
பிரதமர் மோடி: சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கின்றோம். உண்மைகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள். குல்பூஷன் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகம் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்புக்காவும், நலனுக்காகவும் இந்திய அரசு உழைத்துக்கொண்டே இருக்கும்.
சுஷ்மா சுவராஜ்: இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
ராகுல் காந்தி: சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். என்னுடைய எண்ணமெல்லாம் பாகிஸ்தான் சிறையில் தனிமையில் வாடும் குல்பூஷன் ஜாதவ் மிதே இருக்கிறது. ஒரு நாள் அவர் நிச்சயம் இந்தியா திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பிரியங்கா காந்தி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு மனநிறைவு அளிக்கிறது. இறுதியில் நீதி வென்றது. இந்தியர்கள் அனைவரும் அவரின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுப்போம்.
ராஜ்நாத் சிங்: இந்த தீர்ப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.