இந்தியாவின் புனித நதியாக கருதப்படும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. எனினும் தற்போது வரையில் அந்த நதி முழுவதுமாக சீரமைக்கப்படாமல் இருந்துவருகிறது. பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின் கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை துரிதமாக எடுத்துவந்தார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலரான ரவீந்திர குமார், கங்கா சுவச் பாரத் அபியான் 2019 என்ற பெயரில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கினார்.
மத்திய குடிநீர், சுகாதார அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் இவர் மே 23 ஆம் தேதி இந்தச் சாதனையை படைத்தார். அவர் தண்ணீர் மாசு, தண்ணீர் பிரச்னை, நீரை சேமிப்பது போன்றவைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே எவரெஸ்ட் சிகரம் ஏறியதாக தெரிவித்தார்.
மேலும் கங்கை நதியை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு பதாகைகளையும் உடன் எடுத்துச் சென்று அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவர் முன்னதாக 2013ஆம் ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். இதன்மூலம் வடக்கு (சீனா), தெற்கு (நேபாள்) என இரண்டு திசைகள் வாயிலாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் ஐஏஎஸ் அலுவலர் என்ற சாதனையை படைத்தார்.