கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனாவுடன் இந்தியா கடும் போர் புரிகிறது. சிப்பாய்களாக களத்தில் நின்று அசுர வேகத்தில் சுழன்று மக்களைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் சேவகர்கள். மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மாவட்ட ஆட்சியர்கள் என நீளும் இப்பட்டியலில் இருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் தீயாய் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.
இருப்பினும் ஒரு சில அலுவலர்கள் கடமையே கண்ணாக இருந்து அவ்வப்போது செயற்கரிய செயலைச் செய்வார்கள். அவ்வாறு செய்த மக்கள் சேவகரான விசாகப்பட்டினம் பெருமாநகராட்சி ஆணையர் ஸ்ரீஜனா கும்மல்லாவின் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீஜனா 2013ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. தற்போது அவர் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அவரது கணவர் வழக்கறிஞர். இந்தியாவுக்குள் கரோனா கால்தடத்தைப் பதித்ததையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட சமயத்தில் நிறைமாத கர்ப்பிணியாக அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீஜனா, பிரசவத்திற்காக ஒருமாத காலம் விடுப்பில் சென்றார்.
இதையடுத்து மூன்று வாரங்களுக்கு முன் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இச்சூழலில் கரோனாவின் தீவிரம் அதிகரிக்கவே, ஊரடங்கை நீட்டிக்கலாம் என்ற பேச்சு எழுந்தவுடன், மீண்டும் அவரை கடமை அழைத்துள்ளது. தன் விருப்பத்தை கணவரிடமும் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். முதலில் ஸ்ரீஜனாவின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவரின் முடிவுக்கு தயக்கம் காட்டிய அவர்கள், பின்னர் சம்மதித்துள்ளனர்.