தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

13 பேருடன் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

டெல்லி அருணாச்சலப் பிரதேசம் அருகே 13 பேருடன் மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

By

Published : Jun 11, 2019, 3:50 PM IST

iaf

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஒன்று, அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படை தளத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெச்சுக்கா பாதுகாப்புப்படை தளத்திற்கு எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேருடன் கடந்த ஜூன் 3 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானம் அங்கிருந்து கிளம்பி 35 நிமிடங்களுக்கு பின் விமான கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டதையடுத்து விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் விமானத்தை தேடும் பணியில் விமானப்படையினர் ஈடுபடத் தொடங்கினர்.

இந்தத் தேடுதல் பணியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30, சி-130 சிறப்புப் போர் விமானங்கள், ஏ.எல்.ஹெச். பாதுகாப்புப்படை ஹெலிகாப்டர்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இஸ்ரோவும் விமானத்தை தேடுவதற்கு செயற்கோள் வாயிலாக உதவிபுரிந்தது.

விமானம் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், கரடுமுரடான பாதைகள் உடையதாகவும் இருந்ததால் விமானத்தை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவந்தது.

மேலும், விமானம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் விமானம் குறித்த தகவல் கிடைக்காமல் தேடுதல் படை வீரர்கள் திணறிவந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றுவந்த நிலையில், இன்று காணாமல் போன விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் லிபோ நகரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில் கிடைத்ததாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அப்பகுதி நிலப்பரப்பில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதாகவும், அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிக்காப்டர் காணாமல்போன விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் விமானப்படை அறிவித்தது.

மேலும், விமானத்தின் பயணித்தவர்களின் நிலை குறித்தும், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமானப்படை அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details