இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பேராசிரியர் அபிஜித் பானர்ஜி, "நாட்டில் நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே வரம்பு மீறிச் சென்றுள்ளது. அது மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், இதனைக் காரணம் காட்டி, அரசு அதன் செலவைக் குறைக்க முடிவெடுத்திருப்பதை நான் ஆதரிக்க மாட்டேன்" என்றார்.
பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய நிதி நிலை அறிக்கையில், கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து சுமார் ரூ. 3 ஆயிரம் கோடியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "கல்வி மாநிலப் பிரச்னை என்பதால் மத்திய அரசு அதில் குறைந்த அளவே நிதி ஒதுக்கி வருகிறது. இது தான் உண்மை. தற்போது கல்வி நிதியை ரூ. 3 ஆயிரம் கோடி வரை குறைப்பதென்பது பெருங்கடலில் சிறு துளியைக் கலப்பது போன்று. மாநில அரசுகளுக்கு அது பெரும் சுமையாக அமைந்துவிடும்.
என்னைப் பொறுத்தவரை நம்மிடம் உள்ள வளங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டில் உள்ள ஆசிரியர்கள் நல்ல சம்பளம் பெறுகின்றனர். அதனால் அவர்களை எப்படி திறம்பட வேலை செய்ய வைக்க வேண்டும் என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : 'குடியுரிமை திருத்தச் சட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதிப்பில்லை' - மோடி உறுதி