புதுச்சேரி தமிழ்ச் சங்க பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கோ.செல்வம் இன்று செய்தியாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'புதுச்சேரியில் 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுவைத் தமிழ்ச் சங்கம், தமிழ் அறிஞர்கள், தமிழ் மாமணிகள் போன்ற தமிழறிஞர்கள் தமிழ் வளர்ச்சிப் பாதுகாப்பு போன்ற சுயநலமில்லாத இலக்கியப் பணிகள் செய்ய ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும்' என்றார்.
அண்மைக் காலங்களில் இந்த சங்கப் பணிகளில் அரசியல், தனிநபர் புகழ் பாடுதல், முறைகேடான பணிகள் செய்யப்படுகின்றன என்றும், சங்க விதிகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றும், ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிறப்பு பொதுக்குழு என்று இரண்டு முறை மட்டுமே கூட்டப்பட்டது என்றும் வேதனை தெரிவித்தார். அதேபோல் பட்டயக் கணக்காளர் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை அதன் பொதுக்குழு அழைப்புடன் உறுப்பினருக்கு அனுப்புவது இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், புதுச்சேரி அரசின் நிதிஉதவி பெறுவதால் இக்கட்டடம் வாடகைக்கு விட படக்கூடாது எனவும், கடந்த ஜனவரி 1, 2020ஆம் ஆண்டு தமிழ்ச் சங்க பொதுக்குழு நடந்தது, முற்றிலும் ஜனநாயகத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.