மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சொன்ன இடத்தில் போட்டியிடுவேன் என முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான திக் விஜய் சிங் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங் ராஜ்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் மத்தியப்பிரதேசம் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான கமல்நாத், 'பாஜகவின் சாதகமான போபால், விதிஷா, இந்தூர் ஆகிய தொகுதிகளில் திக் விஜய் சிங் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?' என சவால் விடுத்திருந்தார்.
கமல்நாத்தின் சவாலுக்கு பதிலளித்து பேசிய திக் விஜய் சிங், தலைவர் (ராகுல் காந்தி) எங்கு போட்டியிடச்சொன்னாலும், அங்கே கண்டிப்பாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
இந்துார் மக்களவைத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 1991 முதல் 2014 வரை தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இங்கு கடைசியாக காங்கிரஸ் 1984ஆம் ஆண்டு வெற்றிபெற்றது. விதிஷா மக்களவைத் தொகுதியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1991ஆம் ஆண்டும், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 2009, 2014 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
மக்களவைத் தேர்தல் மத்தியப்பிரதேசத்தில் நான்கு கட்டமாக நடக்க உள்ளது.