குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சட்டப்பேரவையில் கூறுகையில், "என்னிடமே பிறப்புச் சான்றிதழ் இல்லாதபோது, என் அப்பாவின் சான்றிதழை என்னால் எப்படி சமர்ப்பிக்க முடியும். இது எனக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நான் கிராமத்தில் பிறந்தவன். மருத்துவமனைகள் இல்லாத காலத்தில் வழங்கப்படும் சான்றிதழ்களில் அரசு முத்திரை இருக்காது. 580 ஏக்கர் நிலங்களைச் சொந்தமாகக் கொண்ட என்னால் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் பட்டியலினத்தவர், பழங்குடியினர், ஏழை மக்கள் ஆகியோர் எப்படி அதைச் சமர்ப்பிக்க முடியும். என் கட்சிக்கு சில கொள்கைகள் உண்டு. அதனை என்னால் சமரசம் செய்ய முடியாது. சாதி, மத, இன பேதமின்றி அனைத்து மக்களையும் ஒன்றாகப் பார்க்கும் அரசியலமைப்புக்கு எதிரானது குடியுரிமை திருத்தச் சட்டம்.